நாளுக்கு நாள் பயனர்களிடமிருந்து முக்கியமான தகவல்களைத் திருடும் புதிய தீம்பொருள்கள் பலவற்றை காண்கிறோம். ஜோக்கர் தீம்பொருள் சமீபத்தில் மிகவும் அதிநவீன தீம்பொருளில் ஒன்றாக தலைப்புச் செய்திகளை உருவாக்கியது. தற்பொழுது, ‘பிளாக்ராக்’ (‘BlackRock’) என்ற புதிய தீம்பொருள் உங்கள் டிஜிட்டல் வாழ்க்கையை துல்லியமாக அழிக்கக்கூடும்.
பொதுவாக, தீம்பொருளை அகற்றுவதற்கான எளிய வழி, அந்த செயலிகளை உங்கள் கைபேசியிலிருந்து நீக்குவதுதான். பிளாக்ராக்கைப் பொறுத்தவரை, விஷயங்கள் அவ்வளவு எளிதாக இல்லை. இந்த புதிய பிளாக்ராக், பிரபலமான செயலிகளான Gmail, Netflix, Amazon, Twitter, Whatsapp, Snapchat, Facebook, YouTube மற்றும் பிறவற்றை குறிவைக்கிறது. மேலும், தீம்பொருளின் இலக்கு 337 செயலிகள் வரை இருக்கலாம். எனவே, ஸ்மார்ட்போன்களிலிருந்து இந்த அனைத்து செயலிகளையும் நீக்குவது சாத்தியமல்ல.
பிளாக்ராக் தீம்பொருள் என்றால் என்ன?
சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ThreatFabric, இந்த புதிய பிளாக்ராக் தீம்பொருளைக் கண்டுபிடித்தது. இது 377 செயலிகளின் கடவுச்சொற்கள் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள் போன்ற முக்கியமான தகவல்களைத் திருடுகிறது. இதை லோகிபாட் (LokiBot) உருவாக்கியுள்ளது.
வங்கி செயலிகளை மட்டும் குறிவைக்கும் முந்தைய தலைமுறை ட்ரோஜான்களைப் போலல்லாமல், இது சமூக ஊடகங்கள், டேட்டிங், இசை, வீடியோக்கள் மற்றும் பல வகைகளில் உள்ள செயலிகளை குறிவைக்கிறது.
பிளாக்ராக் எவ்வாறு செயல்படுகிறது?
பிளாக்ராக் மற்ற Android தீம்பொருளைப் போன்றது. இது ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்டதும், இலக்கு செயலியை (Targeted apps) கண்காணிக்கிறது. பின், உள்நுழைவு அல்லது கிரெடிட் கார்டு தகவலை ஒரு சேவையகத்திற்கு அனுப்புவதன் மூலம் தகவலைத் திருடுகிறது.
பிளாக்ராக்கின் ஒரே நல்ல விஷயம் என்னவென்றால், இந்த தீம்பொருள் அதிகாரப்பூர்வ Google Play செயலிகளில் வருவதில்லை. ஆனால் நீங்கள் மூன்றாம் தரப்பு Android செயலிக் கடைகளிலிருந்து APK கோப்புகள் மற்றும் செயலிகளை நிறுவ விரும்பும் ஒருவர் என்றால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
“தீம்பொருள் முதன்முதலில் சாதனத்தில் நிறுவப்பட்டதும், அதன் ஐகானை செயலி அலமாரியிலிருந்து மறைத்து பயனர்கள் கண்ணுக்கு தெரியாததாக மாற்றிவிடுகிறது. இரண்டாவது கட்டமாக, பயனரிடம் அணுகல் சேவை (Accessibility services) சலுகைகளை இது கேட்கிறது. ” அணுகல் சேவை சலுகைகள் வழங்கப்பட்டவுடன், அது எந்த சிக்கலும் இல்லாமல் செயல்பட வேண்டிய கூடுதல் அனுமதிகளை பெற்றுவிடுகிறது.
இந்த தீம்பொருள் செய்திகளை இன்பாக்ஸில் ஸ்பேம் செய்யும், அனைத்து உரை செய்திகளையும் படிக்கும், வங்கியின் சேவையகங்களுக்கு அனுப்பப்பட்ட SMS மற்றும் பிறருக்கு அனுப்பும் SMS ஐ படிக்கும். இது சாதனத்தில் தட்டச்சு செய்த அனைத்தையும் படிக்கலாம், தொலைபேசியின் திரையை பூட்டலாம் மற்றும் பெறப்பட்ட அனைத்து அறிவிப்புகளையும் (Notifications) சேகரிக்கலாம்.
பயனர்கள் ஒரு வைரஸ் தடுப்பு செயலியைக் கொண்டு இந்த செயலியை நீக்க முயற்சித்தால், அது கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்படுவதைத் தவிர்க்க முகப்புத் திரைக்கு திருப்பி விடப்படும்.