நீங்கள் பயன்படுத்தும் Tiktok, PUBG மற்றும் பிற செயலிகள் உங்கள் கிளிப்போர்டை (Clipboard) ரகசியமாகப் படிக்கின்றன என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்!! ஆப்பிள் நிறுவனம் தனது iOS 14 டெவலப்பர் பீட்டாவை WWDC 2020 மேடையில் (ஜூன் 22) வெளியிட்டது. தற்பொழுது டெவலப்பர் பீட்டாவை பயனர்கள் சோதிக்கத் தொடங்கியுள்ளதால், ஆப்பிள் மேடையில் முன்னிலைப்படுத்தாத iOS 14 இல் ஒரு சிறிய அம்சம் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த புதிய iOS 14 தனியுரிமை அம்சம், ஆப்பிள் Clipboard இல் நகலெடுக்கப்படும் உரை பிற செயலிகளால் அணுகப்படும்போது பயனரை எச்சரிக்கிறது. மேலும் ஒவ்வொரு முறையும் தொடங்கும் போதெல்லாம் திடுக்கிடும் எண்ணிக்கையிலான செயலிகள் உங்கள் கிளிப்போர்டைப் படிக்கின்றன என்பதை ட்விட்டர் மற்றும் யூடியூப்பில் உள்ள பயனர்கள் கவனித்துள்ளனர். இது பல பிரபலமான செயலிகளை அம்பலப்படுத்தியுள்ளது மற்றும் கிளிப்போர்டு தனியுரிமை குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.

“ஆராய்ச்சியாளர்கள் Talal Haj Bakry மற்றும் Tommy Mysk, 30க்கும் மேற்பட்ட செயலிகளின் பட்டியலைத் தொகுத்துள்ளனர். இதில் Tiktok, Linkedin, Fox News, New York Times, AccuWeather, Overstock, AliExpress, Call of Duty Mobile, Patreon மற்றும் Google News போன்ற மிக பிரபலமான செயலியும் அடங்கும்.”

Tiktok, “இது ஸ்பேம் எதிர்ப்பு அம்சம் என்றும் எதிர்கால புதுப்பிப்புடன் அதை அகற்றுவதாகவும்” The verge இல் கடந்த வாரம் கூறியது. இப்போது சிக்கலைத் தீர்த்து, புதுப்பிக்கப்பட்ட பதிப்பை ஆப்ஸ்டோருக்கு அனுப்பியுள்ளது. புதிய பதிப்பில் Tiktok இனி கிளிப்போர்டை அணுகுவதாகத் தெரியவில்லை என்பதை மேக்ரூமர்ஸின் அறிக்கை தெரிவிக்கிறது.

Erran Berger, LinkedIn இன் துணைத் தலைவர், “கிளிப்போர்டு உள்ளடக்கங்களை சேமிக்கவோ அல்லது கடத்தவோ இல்லை” என்றும் பயனர்களுக்கு உறுதியளிக்கிறார். மேலும் ஒரு பிழைத்திருத்தம் Linkedin செயலியில் நேரலைக்கு வர உள்ளது, இது எப்போது நிகழும் என்பதற்கான தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

கடவுச்சொற்கள் (Password), தனியார் கிரிப்டோ விசைகள் (private crypto keys) மற்றும் கிரெடிட் கார்டு எண்கள் வரை அனைத்தும் நாம் கிளிப்போர்டுகள் வழியாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. “எந்தவொரு செயலிக்கும் அனுமதியின்றி கிளிப்போர்டை அணுகும் திறன் உள்ளது” என்பதுதான் பயமுறுத்துவதாக உள்ளது. தற்பொழுது iOS 14 இன் கிளிப்போர்டு நகலெடுக்கும் தனியுரிமை அம்சம் ஒரு திருப்புமுனையை கொண்டுவந்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இப்போதைக்கு, நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம், முக்கியமான தகவல்களை கிளிப்போர்டுக்கு நகலெடுக்காமல் கவனமாக இருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here